Wednesday, May 09, 2012

புலியைக் கேட்ட பூனையின் மியாவ்...!

தாமரைப் பூந்தாளெடுத்து

தாவிவரும் தங்கரதம்

மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ...

தாமரைப் பூந்தாளெடுத்து

தாவிவரும் தங்கரதம்

மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ...

அவன் பூவிதழில் புன்னகைத்து

புனைவிழியில் புல்லரித்து

புதுமலரில் வண்டெனவே சேராயோ...

புதுமலரில் வண்டெனவே சேராயோ...

கண்ணழகைக் காண்பதற்குக்

காரிருளில் வெள்ளைநிலா

பிள்ளைமுகம் தேடி ஓடி வாராதோ...

வண்ணமயில் தோகை யொன்றை

கண்ணன் முகம் தாங்கியதை

எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...

எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...

(தாமரைப் பூந்தாளெடுத்து)

ராதை மனம் கண்டு அந்த

கோதையுடன் மோகனத்தின்

பாதையிலே பாடிவந்தான் கேளாயோ...

தளிர் ஊடி வரும் காற்றின்

குளிர் ஊதலிலே நாதம்தரும்

குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...

குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...

(தாமரைப் பூந்தாளெடுத்து)

முன்னம் வந்த ராத்திரியில்

மூடவந்த முகத்திரையில்

முத்தமழை சிந்துகின்றான் வாங்காயோ...

புலர் வெள்ளி வரும் வேளை வரை

புல்நுனி நீர் தீரும் வரை

புதல்வனைநீ மடியினிலே தாங்காயோ...

(தாமரைப் பூந்தாளெடுத்து)

Sunday, April 29, 2012

செல்லமே,என் உள்ளத்தில் உறங்கிவிடு!

 'சர்வம் நீயே' வலையில் சென்ற ஆண்டு பதிவிட்ட கண்ணன் பாட்டு  

இங்கு கண்ணன் பாட்டு அன்பர்களுக்காக:




செல்லமே,என் உள்ளத்தில் உறங்கிவிடு!


புல்லை துளைத்தன்று குழல்

மெல்லிசையால் மயக்கியவா!

செல்லாக் காசான எந்தன்

உள்ளத்திலே துளையிட்டு,

மெல்ல மெல்ல உள்புகுந்து,

சொல்லெடுத்துத் தந்துவிட்டு,

சொல்லாமல் கொள்ளாமல்

செல்லத்திட்டமிட்டாயா?

அன்பென்னுங் கல்லிட்டு

அடைத்துவிட்டேன் துளையை!

பொல்லாத போக்கிரியே !

செல்ல வழி ஏதுமில்லை!

தொல்லை செய்யாமல்,ஒரு

நல்லபிள்ளைபோல,எந்தன்

செல்லப்பிள்ளை போல,எந்தன்

உள்ளத்திலே உறங்கிவிடு!

Sunday, April 15, 2012

முத்தம் ஒன்று தந்தால் என்ன?


முத்தம் ஒன்று தந்தால் என்ன, ஆகாதோ? - என்
சித்தம் எல்லாம் நீயேதானே தெரியாதோ?
பித்துக் கொண்டேன் உன்மேல் என்று அறியாயோ? - என்
பக்திப் பூவைச் சூடிக் கொண்டால் ஆகாதோ?

கண்ணால் உன்னைப் பார்த்துப் பார்த்து
காதால் புகழைக் கேட்டுக் கேட்டு
நெஞ்சச் சிறையில் உன்னை வைத்தேன் அறியாயோ? - உனையே
தஞ்சம் என்று கொண்ட என்னை மறந்தாயோ?

உன்றன் பட்டுப் பாதம் கொஞ்சம்
என்னைத் தொட்டால் துயரம் தீரும்
பற்றை விட்டேன் உன்னைப் பற்ற அறியாயோ?
சற்றே என்றன் அருகில் வந்தால் ஆகாதோ?

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.radhagopaljiutempel.com/srikrishnasriradhe.htm

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP